Follow by Email

Thursday, 24 November 2011

இலக்கியங்கள் ஏன்?

"கொள்கைகளை வலியுறுத்துவதற்காக எழுதப்படுவது இலக்கியம் அன்று; இலக்கியம் பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது; பொழுது போக்குக்காகப் பயன்படும் வகையிலே மக்கள் படித்துச் சுவைப்பதற்காக மட்டுமே இலக்கியங்கள் எழுதப்படவேண்டும்; இம்மாதிரி எக்கருத்தையும், எக்கொள்கையையும் பின் பற்றாமல், வெறும் சொல்லலங்காரங்களைக் கொண்டிருப்பதே இலக்கியங்கள்" என்போர் உண்டு. இக்கருத்து எப்பொழுது பிறந்தது? எதற்காகப் பிறந்தது? என்பதே நமக்குப் புரியவில்லை. இக்கருத்துப் பொருத்தமுள்ளதுதானா? இலக்கியம் தோன்றுவதற்கு, வளர்வதற்கு இக்கருத்து ஏற்றதுதானா? இன்று இலக்கியம் என்று போற்றப்படும் நூல்களிலே இக்கருத்தை அடிப்படையாகக் கொண்ட நூல்கள் மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றனவா? என்பவைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும்.
தமிழைப் பொறுத்த வரையிலும் கருத்தோ கொள்கையோ இல்லா நூல்கள் ஒன்றும் இல்லை; புதிய நூல்களும் இல்லை. கருத்தும் கொள்கைகளும் அடங்கிய பழந்தமிழ் நூல்கள்தாம் இன்னும் மக்களால் போற்றப்படுகின்றன; சிறந்த இலக்கியங்கள் என்று பாரட்டப்படுகின்றன.

புறநானூறு
சங்க இலக்கியங்களிலே சிறந்து விளங்கும் புறநானூற்றை எடுத்துக் கொள்வோம். அதுஒரு தனிப் பாடல்களின் திரட்டுத்தான். பழந்தமிழ்ப் புலவர்களின் தொகுதி அது. அப்பாடல்களிலே அரசியல் முறைகளைக் காணலாம். அரசியல் நீதிகளைக் காணலாம்.. மக்கள் வாழ வழி காட்டும் அறவுரைகளைக் காணலாம். உலக நிலையை எடுத்துக் காட்டி உண்மை வழி இதுதான் என்று கூறும் வேதாந்தக் கருத்துக்களைக் காணலாம்; மக்கள் சமுதாயம் ஒன்றுபட்டு இன்பமாக வாழ்வதற்கு வழி கூறும் பாடல்களைக் காணலாம்.
புறநானூற்றுப் பாடல்கள் பெரும்பாலும் கருத்தையும் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டவைகளாக இருப்பதை அவற்றைப் படிப்போர் காண்பார்கள். இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு பாடலைப் பார்ப்போம்.
ஒரு சமயம், சேரன், பாண்டியன், சோழன் மூவேந்தர்களும் சமாதானமாக ஒன்றாகக் கூடியிருந்தனர். சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பவர்களே அம்மூவேந்தர்கள். அவர்கள் ஒன்றாக இருப்பதைக் கண்ட அவ்வையார் அவர்களுக்கு அறிவுரை கூறும் வகையிலே ஒரு பாடலைக் கூறினார். அப்பாடல் புறநானூற்றில் 367-வது பாடலாக அமைந்திருக்கின்றது. அப்பாடலின் பொருளைக் காண்போம்.
"தேவலோகம் போன்ற இன்பப் பகுதிகள் அமைந்த இந்த நாடு. தமது அரச பரம்பரைக்கு உரியதாக இருக்கலாம். ஆயினும், நல்லறங்களைச் செய்யாத அரசர்களுடன் கூடியிராது; அவர்களை விட்டு நீங்கிவிடும். அரச பரம்பரையில் பிறவாதவராயினும், தவம் புரிந்தவர்க்கு உரிமையாகி விடும். ஆதலால் அரச செல்வம் நிலையானது என்று மகிழ்ச்சியடையாதீர்கள். உங்களிடத்தில் செல்வம் இருக்கும்போதே. யாசிக்கின்ற-பல நூல்களையும் கற்றறிந்த அந்தணர்களுக்கு, குளிர்ந்த கை நிறையும்படி மலரும். பொன்னும் நீருடன் தாரை வார்த்துக் கொடுங்கள். பசுமையான பொன்னாபரணங்களை அணிந்த மகளிர் பொற்கிண்ணத்திலே ஊற்றிக் கொடுக்கின்ற பன்னாடையால் வடிகட்டப்பட்ட மதுவை அருந்திக் களிப்படையுங்கள்; வறுமையால் வாடி வந்து இரப்போர்க்கு இல்லையென்னாமல் சிறந்த பண்டங்களை வழங்குங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் இவ்வாறு நீங்கள் வாழ வேண்டும்". இது அப்பாடலில் அடங்கியிருக்கும் அறிவுரை.
நாகத்து அன்ன பாஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றேர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பாருக்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தார்அரி தேறல் மாநதி மகிழ்சிறந்து,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்,
இதுவே மேலே காட்டிய பொருளை விளக்கும் பாடல் பகுதி. இப்பாடல் வாயிலாக அவ்வையார், மூன்று விஷயங்களை மூவேந்தர்களுக்கும் அறிவுறுத்தினார். அவை:-
நல்ல நூல்களையெல்லாம் கற்றறிந்து, உண்மையறிந்து, உலகினர்க்கு வாழ வழிகாட்டும். அறிஞர்களாகிய பார்ப்பார்களை ஆதரியுங்கள். நீங்கள் வீணாகப் போர் புரிந்து காலங் கழிக்காமல், சமாதானத்துடன் இருந்து உண்டு தின்று குடித்து மகிழுங்கள். வறுமையுள்ளோர் வாடாமல் அவர்களுக்கு உதவுங்கள்.
இவைகளே அவ்வையார் அரசர்களுக்கு எடுத்துக் கூறிய மூன்று செய்திகள். இப்பாடல் சிறந்த கருத்தும், கொள்கையும் கொண்டிருப்பதைக் காணலாம். இவை போலவே புறநானூற்றுப் பாடல்கள் பலவும் அமைந்திருக்கின்றன.

திருக்குறள்
அன்று முதல் இன்று வரை, மத, இன, மொழி வெறுப்பின்றி எல்லோராலும் போற்றப்படும் திருக்குறளை எடுத்துக் கொள்ளுவோம். திருக்குறள் ஒரு சிறந்த இலக்கியம். என்பதே பெரும் பாலார் கொள்கை; ஆதலால் அதை இலக்கியம் என்று வைத்துக் கொண்டே பார்ப்போம். அதில் கூறப்படும் அறங்கள் அனைத்தும் மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டுவதற்காகத்தான் என்பதை மறுப்பவர் யார்? திருக்குறளிலே சிறந்த கருத்துக்களும் கொள்கைகளும் அடங்கிக் கிடக்கின்றன என்பதில் ஐயம் இல்லை. அரிய கருத்துக்கள் பலவற்றை அள்ளி அள்ளித் தருவதனால்தான் திருக்குறள் உலகம் போற்றும் ஒப்பற்ற இலக்கியமாக விளங்குகின்றது.
திருக்குறளைப் பலரும் அறிவர். ஆதலால் அதிலிருந்து ஒரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம்.
ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை
போகுஆறு அகலாக் கடை
"பொருள் வரும் வழிசிறியாக இருந்தாலும் பொருள் போகும் வழி அகலமாக இல்லாவிட்டால் அதனால் கெடுதியில்லை."
இக்குறளிலே உள்ள கருத்து என்றும் அழியாமல் நிற்கும் உண்மையாகும். வருவாய் குறைவாக இருந்தாலும், செலவு மிகுதியாக இல்லா விட்டால் -"அதாவது வருவாய்க்குமேல் செலவாகா விட்டால் தீமை ஒன்றும் வந்து விடாது" என்பதுதான் இக்குறளின் கருத்து. வரவுக்குமேல் செலவு செய்யக் கூடாது என்று கூறும் இக்குறள் அறிவுரை கூறும் குறள் என்பதை யார் மறுக்க முடியும்? இவ்வாறே திருக்குறள் சிறந்த கருத்துக்களையும், கொள்கைகளையும் அறிவுறுத்துவதைக் காண்கிறோம்.

No comments:

Post a Comment